தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 884 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இவர்களுக்கு சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளது. இந்த நிலையில், புரசைவாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 165 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.




இதில், 13 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட 13 பேரையும் உடனடியாக சிகிச்சைக்காக தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் அனுமதித்தன்ர.


ஒரே கடையில் வேலை செய்த 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநகராட்சியினர் கடையை தற்காலிகமாக மூடினர். கிருமி நாசினி கொண்டு கடையை சுத்தம் செய்த பிறகே மீண்டும் கடையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வாடிக்கையாளர்களும், அருகில் உள்ள மற்ற கடையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.