நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தேசியத்திற்கு தேவைப்படும் சரத்குமார்


சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க நானும், சமக கட்சியும் இருக்க வேண்டும் என விரும்பினார். மற்றவர்கள் எல்லாம் பேரம் பேசுவார்கள். ஆனால் நான் வந்தால் மோடிக்கு என்ன லாபம் என சரத்குமார் கேட்டார். நேற்று சமத்துவ மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் வந்து சுமூகமாக பேசிவிட்டு சென்றார்கள். 


எல்லாம் நடந்து முடிந்த பிறகு நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சரத்குமார் என்னை போனில் அழைத்தார். நான் ஒரு கனத்த இதயத்தோடு, துணிவோடு, அன்போடு ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொன்னார். அதாவது சமத்துவ மக்கள் கட்சியை முழுவதுமாக பாஜகவில் இணைத்து 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பாடுபடப் போகிறேன்” என சொன்னார்.


சரத்குமாரின் முடிவு எளிதானது இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கட்சி நடத்துவது என்பது கடினம். எல்லாரும் பண முதலைகள்.இதன் இடையில் சொந்த பணத்தை எல்லாம் போட்டு கண்ணியமாக கட்சியை இவ்வளவு தூரம் சரத்குமார் கொண்டு வந்திருப்பது பெரிய விஷயம். நிச்சயமாக ஒருநாள் கூட இந்த முடிவை நினைத்து நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். சரத்குமார் அவர்களை தமிழகத்தில் அடைத்து வைக்க விரும்பவில்லை. அவர் இன்று தேசியத்திற்கு தேவைப்படுகிறார்” என அண்ணாமலை பேசினார். 


சரத்குமார் சொன்னது என்ன?


தொடர்ந்து பேசிய சரத்குமார், “ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி? எத்தனை இடங்கள் நிற்க போகிறீர்கள்? என்ற கேள்வி எழும். இது என்னை இரவு நேரத்தில் மனதை தாக்கியது. நம்முடைய இயக்கம் ஆரம்பித்தோம். ஆனால் கூட்டணி, எத்தனை சீட் என்பது தான் கேள்வியாக உள்ளது.மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிபட்டு போகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காக கட்சி  இணைப்பு நடைபெற்றுள்ளது.  
இது ஒரு எழுச்சியின் தொடக்கம். ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த மோடி நாட்டின் பிரதமரானதை நினைத்து பார்க்க வேண்டும். நமது இயக்கம் தொடர்ந்து தொடர்ந்து தேர்தலை சந்தித்து கொண்டிருப்பதற்கு பதிலாக நம்முடைய சக்தியை மற்றொரு சக்தியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என்று தோன்றியது என சரத்குமார் தெரிவித்துள்ளார். 


1996 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து திமுக சார்பில் மக்களவை உறுப்பினரானார். இதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். அக்கட்சி 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016 தேர்தலில் தோல்வியடைந்தார்.  என்பது குறிப்பிடத்தக்கது.