EPS On CAA: தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்:
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சிஏஏ) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக, ஆரம்பகட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், சிஏஏ சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனால், தமிழகத்தில் அதிமுக மீது கடும் அதிருப்தி எழுந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கட்சிகள், அதிமுகவை கடுமையாக சாடின.
சிஏஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டாங்க - ஈபிஎஸ்
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “சிஏஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதை சொல்லுங்க. நாங்க தீர்வு காண்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்படுறாங்கனு சுட்டிக்காட்டுங்க. நாங்க அதுக்கு பதில் சொல்றோம். யாரு பாதிச்சிருக்கா, விளக்கம் சொல்லுங்க. யாரும் பாதிக்கப்படவில்லை” என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமல்படுத்தியுள்ளது. ஆனால், சட்டமசோதாவிற்கு அன்று ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டம் - நிலைப்பாட்டை மாற்றிய எடப்பாடி பழனிசாமி:
சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ” பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த இரட்டை நிலைப்பாடு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
சிஏஏ சட்டத்தை ஆதரித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி:
இதனிடையே, சிஏஏ சட்டத்தை ஆட்சியில் இருந்தபோது ஆதரித்தது ஏன் என்பது குறித்து, அண்மையில் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்து இருந்தார். எஸ்டிபிஐ சார்பில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், “என்னுடன் பேசிய நண்பர்கள் சிலர் சிஏஏ பற்றி கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் முதலமைச்சராக இருந்தது எவ்வளவு நெருக்கடியான காலக்கட்டம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சட்டமன்றத்தில் திமுகவை விட எங்களுக்கு 4 பேர் தாங்க அதிகம். அந்த நான்கரை ஆண்டுகாலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இப்போ ஒருத்தரு (ஓபிஎஸ்) வெளியே போயிருக்கார்ல, அவரை வைத்துக் கொண்டே நான் காலத்தை ஓட்ட வேண்டியதாக இருந்தது. நான் எதிர்த்து ஓட்டு போட்டால் ஆட்சி இருக்காதுனு அவர் சொன்னாரு. அதனால் கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, எங்களுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாத சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம்” என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.