தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலத்தில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை வரவேற்றுள்ளனர். குறிப்பாக சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் பணியாற்றக்கூடிய 50ற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை மகிழ்ச்சி பொங்க பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பெரிதும் கொண்டாடாமல் தூய்மை பணியில் ஈடுபட்டு பட்டாசு வெடித்த குப்பைகளை அள்ளி வந்த நிலையில் மத்தாப்பு போன்று மனம் பொங்கி மகிழ்ச்சியாக பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக முதன்முறையாக தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடினர். இதைபோன்று எந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதில்லை என தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதில் தலை தீபாவளியை விட்டுவிட்டு தூய்மை பணியாளர் ஒருவர், சக ஊழியர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தலை தீபாவளியை விட இந்த தூய்மை பணியாளர்களின் தீபாவளி கொண்டாட்டம் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.



இதேபோன்று சேலத்தில் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சேலம் மாநகரப் பகுதியில் உள்ள ராஜகணபதி திருக்கோவில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காடு, மேட்டூர் அணை, குருமாம்பட்டி வன உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவர்களது அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக சேலம் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று சேலம் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீ காயங்களுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.