திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. இந்த அணைப்பகுதியில் நீர்வளத் துறை அலுவலகம், காவல்நிலையம், தபால்நிலையம் , நீர் மின்சாரம் தயாரிக்கும் அலுவலகம், அணையில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்பு, சாத்தனூர் வனச்சராகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய முதலை பண்ணை சாத்தனூர் அணையில் உள்ளது. இந்த முதலைப் பண்ணை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சிறிய, பெரிய தொட்டிகளில் சுமார் 378 முதலைகள் உள்ளன. முதலையை பாதுகாப்பதற்காக வனச்சரக அலுவலர் ராஜராஜன், வனக்காப்பாளர்கள் சேகரன், இந்திரகுமார், தற்காலிக ஊழியர்கள் மூன்று பேர் பணிபுரிந்து வருகின்றனர். முதலைப் பண்ணை வளாகத்தில் பல்வேறு வகையான உயர்தர மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இரவு வனக்காவலர் கையை கட்டிபோட்டு சந்தனமரம் வெட்டி கடத்தல்
மேலும் முதலை பண்ணை வளாகத்தில் சந்தன மரம் ஒன்று இருந்தது. இந்த நிலையில் இரவு வனக்காவலர் சேகரன் மட்டும் பணியில் இருந்துள்ளார். இரவு 10 மணி அளவில் முகமூடி அணிந்தபடி வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முதலை பண்ணை உள்ளே சென்று வன காவலர் சேகரை தாக்கி கை,கால்களை கட்டி போட்டுவிட்டு வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை இயந்திரம் மூலமாக அடியோடு அறுத்து துண்டு துண்டாக்கி மர்ம ஆசாமிகள் எடுத்து வந்த மினி லோடு வேனில் ஏற்றி கடத்திச் சென்றனர். அப்போது பரவலாக சாத்தனூர் பகுதியில் மழை பெய்தால் தற்காலிக ஊழியர் இரவு காவல் பணிக்கு வருவதற்கு காலதாமதமாக 11 மணியளவில் வந்தார். இரவு காவல் பணிக்கு வந்த நபர் வனக்காவலர் சேகரன் கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கட்டி இருந்த கயிறுகளை கழட்டி விட்டு என்ன நடந்தது என அவரிடம் கேட்டார்.
மாவட்ட வனச்சர அலுவலர் யோகேஷ் கர்க் ஆய்வு
அப்போது சேகரன் என்னை கட்டிப்போட்டு விட்டு வளாகத்தில் உள்ள இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர் என தெரிவித்தார். மேலும் வனக்காவலர் சேகரன் உடனடியாக வனச்சரக அலுவலர் ராஜராஜன், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கர்க் ஆகிய இருவருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வனச்சர அலுவலர் யோகேஷ் கர்க் மற்றும் முதலை பண்ணை வனத்துறை அதிகாரிகள் சாத்தனூர் அணை முதலை பண்ணை பகுதியில் இருந்த சந்தன மரம் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்பு முதலை பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
சாத்தனூர் அணை நுழைவாயில் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவலாளியை கட்டிப்போட்டு விட்டு முகமூடி ஆசாமிகள் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.