கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளது இந்தியா. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளின் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 26முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தியேட்டர்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளும் அடைக்கப்பட்டன.
பெரிய கடைகள், வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை. மளிகை, காய்கறி உள்பட கடைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் இயங்க அனுமதி. அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு அளித்தனர்
அரசின் உத்தரவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு அளித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், வருவாய் துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனுவை அளித்த அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில்,
சலூன் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.