சென்னையில் வாகன ஓட்டிகள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தாலும், அண்ணாநகர், வேளச்சேரி போன்ற பிரதான பகுதி சாலைகளில் வாகன ஓட்டிகள் ஊர்ந்துதான் சென்றுகொண்டு இருக்கிறார்கள். காரணம், வெட்டப்பட்ட சாலைகள். சாலைகளை செப்பனிட வேண்டுமென்றால் பழைய தார்சாலையை மேற்புறமாக வெட்டி எடுத்து மீண்டும் அதன் மேல் சாலையிடுவது வழக்கம். சாலையின் உயரத்தை ஒரே அளவில் கடைபிடிப்பதற்காக இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை போன்ற பரபரப்பான சாலைகளை பொருத்தவரை பகல் நேரத்தில் சாலைகள் வெட்டப்பட்டால் இரவு நேரத்தில் சாலை அமைப்பது வழக்கம். வாகன் நெரிசலும் ஏற்படாது என்பதால் இரவு நேரத்தில் சாலைகள் அமைப்பது வசதியானதும் கூட. ஆனால் தற்போது சென்னையின் பிரதான சாலைகள் பல வெட்டப்பட்டு நீண்டு நாட்களாக கிடப்பில் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் வெட்டப்பட்ட சாலையில் வாகனத்தை இயக்க முடியாமல் திணறுகின்றனர்.
பல இடங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. அண்ணாநகரில் 3வது அவென்யூ - சாந்தி காலனி வரையிலான சாலை, வேளச்சேரியின் முக்கிய சாலைகள் என சென்னையில் பலப்பகுதிகளிலும் சாலைகள் வெட்டப்பட்டுள்ளன. அண்ணா சாலையின் முக்கிய சந்திப்புகளிலும் சாலைகள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள வாகன ஓட்டிகள், சாலைகள் வெட்டப்பட்டு கிடப்பதால் வாகனங்கள் இயக்குவது சிரமமாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களை நிலைதடுமாறும் நிலையில் இயக்க வேண்டியுள்ளது. இதனால் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. என்கின்றனர்.
இது குறித்து தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் சாலைகள் இரவு நேரங்களில் போடப்படுவது வழக்கம். தற்போது இரவு நேர ஊரடங்கு காரணமாக வேலை தடைபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இரவு நேர ஊரடங்கில் அடிப்படை வசதிகளான சாலைகளை செப்பனிட அனுமதி வழங்க வேண்டும் என்பதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சாலைகளை அமைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுமே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.