தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டது.
நான்கு மணி நேரமாக குறைக்கப்பட்ட டாஸ்மாக் விற்பனை நேரமும், காலை 8 மணிக்கு கடையை திறப்பதாலும் வழக்கத்தை விட விற்பனை அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை 8 மணிக்கு கடை திறந்த போதும், குடிமகன்கள் பலர் ஆர்வமுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதன் படி நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 72 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. அதிகாரிகளை பொறுத்தவரை இது வழக்கமான விற்பனையை விட பாதிக்கும் குறைவான விற்பனையே.
ஆனால் 4 மணி நேரத்தில் இந்த அளவிற்கு, அதுவும் கொரோனா கட்டுப்பாடுகளை கடந்து விற்பனையாகியிருக்கிறது என்பது வியக்க கூடிய ஒன்றே. எத்தனை மணிக்கு கடையை திறந்தாலும் அதற்கு குடிமகன்கள் ஆதரவு அளிப்பார்கள் என்கிற வகையில் தான் இந்த விற்பனை விபரம் இருக்கிறது. அதே நேரத்தில் வழக்கமாக மது வாங்குவோரில் பெரும்பாலானோர் விழிப்புணர்வுடன் மது வாங்குவதை தவிர்த்திருக்கிறார் என்பது ஆறுதலாக விசயமே.