சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 42 இடங்களில் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் நடத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையாக கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட வனத்துறையில், சேலம் வனக்கோட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் இந்த ஈர நிலப்பகுதி பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. இப்பணியை அந்தந்த மாவட்ட வன அலுவலர் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர். சேலம் வனக் கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர், வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சேர்வராயன் மலை, ஜருகுமலை, சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை அடிவார பகுதிகள், அங்குள்ள குட்டைகள், ஏரிகள் போன்றவற்றில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாநகர் சின்ன திருப்பதி அடுத்துள்ள மூக்கனேரி பகுதியில் மாவட்ட வன அலுவலர் ரவி தலைமையில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். மூக்கனேரி ஏரிப்பகுதியில் இருந்த ஒவ்வொரு பறவைகளையும் பைனாகுலர் மூலம் பார்த்து, அதன் விவரத்தை பதிவு செய்து கொண்டனர். சில பறவைகளின் வெவ்வேறு வகைகளை பார்த்தனர். அதனையும் குறிப்பெடுத்துக் கொண்டனர். மொத்தமாக சேலம் வனக் கோட்டத்தில் 200 பேர், 21 இடங்களில் இக்கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இதில் சேலம் மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக வரும் பறவைகள், இந்த ஆண்டு புதிதாக வந்துள்ள பறவைகள் குறித்து குறிப்புகள் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. சேலம் வனக் கோட்டத்தில் 200 பேர், 21 இடங்களில் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகளை கண்டு, தனியாக பதிவு செய்கிறோம். அதுபோக இங்குள்ள பல வகை பறவைகளில் புதியனவற்றை பார்க்கிறோம். எத்தனை வகையான பறவைகளை கண்டறிந்தோம் என்பதை பதிவிட்டு வனத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்பி வைப்போம். பிறகு சேலம் வன பகுதியில் காணப்பட்ட புதிய வகை பறவைகள் குறித்த தகவலை வெளியிடுவோம். கடந்த ஆண்டு காணப்பட்ட பறவைகள் போக சில புதிய வகை பறவைகளை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.