நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு 24 பார்கனஸ் பகுதியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தாக்கூர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தெற்கு 24 பார்கனஸ் பகுதியில் நேற்று பேசிய அமைச்சர் சாந்தனு தாக்கூர், ’’இந்த மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் 7 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்துள்ளார். 


அதென்ன சிஏஏ (Citizenship Amendment Act CAA) சட்டம்?


பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில்,  11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 


எனினும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்  குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதாவது டிசம்பர் 31, 2014ஆம் ஆண்டுக்குள் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.






ஆனால் இதே நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதியில்லை. அதே போல இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அனுமதியில்லை என்று கூறப்பட்டது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ’’குடியுரிமைத் திருத்தம் சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் அது இந்த நாட்டுக்கான சட்டம்’’ என்று தெரிவித்து இருந்தார். 


இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.