சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்படி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் BSC நர்சிங் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று மதியம் சாதம் மற்றும் பச்சை பயிறு குழம்பு உட்கொண்டுள்ளனர். பின்னர் நேற்றிரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 60க்கும் மேற்பட்ட மாணவிகள் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவிகள் அழைத்து வந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்பாக சிகிச்சைக்காக கல்லூரி வாகனத்தில் குளுக்கோஸ் கட்டியவாறு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபடியே சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். 



கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை:


இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் வீராணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 60க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு எவ்வாறு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவு முறையாக தயார் செய்யப்பட்டதா உள்ளிட்டவைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உணவுபாதுகாப்புத்துறை சோதனை:


இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உணவு சமைத்த ஊழியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது உணவு கூடத்திற்கு அனுமதி பெறாமல் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு கூடத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், தண்ணீரில் கழிவு நீர் கலப்பது போன்று தெரிவதால் உணவு கூடத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர் ஆறுதல்:


இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நர்சிங் மாணவிகளை நலம் விசாரித்தார். மேலும் மருத்துவரிடம் முறையான சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கினார்.


பாதிக்கப்பட்ட மாணவிகள்:


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், உணவு முறையாக சமைப்பதில்லை என்றும் உணவில் பூச்சி இருந்ததால்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். உணவு சுகாதாரமான முறையில் சமைக்கவில்லை என்று பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு முன்பாக உணவு சாப்பிடுவதால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாணவிகள் கூறினர்.


மாணவிகளின் பெற்றோர்கள்:


கல்லூரி மாணவிகளின் பெற்றோர் பேசியதில், கல்லூரி விடுதியில் உணவில் பூச்சி இருந்தால் எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்று மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவிப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். மேலும் சுகாதாரமான முறையில் உணவு சமைப்பதில்லை இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.