ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆடிப்பெருக்கு நாளில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து இந்த ஆண்டு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கபடவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் யாரும் நீராட வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும், கரையோரம் வசிக்கும் மக்கள் முகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அபரிமிதமான நீர் திறக்கப்படவிருப்பதால், ஆற்றில் இறங்கவோ, ஆற்றுக்கு அருகில் செல்லவோ, செல்பி எடுக்க முயற்சிப்பதோ கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கர்நாடகத்தின் பெரும்பாலான இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கனஅடி நீர் வந்துகொண்டு உள்ளது. அணையில் இருந்து உபரி நீராக வெளியேற்றப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், காவிரி ஆறு ஓடும் திருச்சி மாவட்டத்திலும், ஆடிப்பெருக்கின் போது காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை ஆற்றங்கரைகளில் கொண்டாட காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீடுகளில் உள்ள காவிரி குடிநீர் குழாய்க்கும், ஆழ்குழாய் கிணற்றிலும் பூஜை செய்து வழிபட்டனா். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா அன்று காவிரி படித்துறைகள் களை இழந்து காணப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்