தமிழக மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பாக குற்றம் சாட்டியது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 






தமிழக மின்துறையில் ஏற்பட்டுள்ள கடன் காரணமாகவும், மத்திய அரசின் அறிவுறுத்தல் காரணமாகவும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 






இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி  நிலக்கரி கொள்முதல் என்ற பெயரில் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரியத்தில் தவறு நடப்பதாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்து அண்ணாமலை தைரியமுள்ளவராக இருந்தால்  வழக்கு பதியட்டும் என தெரிவித்திருந்தார். இருவருக்குமான கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனிடையே இன்று பத்திரிக்கையாளரை சந்தித்த அண்ணாமலையிடம், செந்தில் பாலாஜி சொன்னது குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சரே எங்கள் அரசில் நியாயம் கிடைக்காது என ஒப்புக்கொண்டதாக அண்ணாமலை கூறினார். தொடர்ந்து அமலாக்கத்துறை எப்போது செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள் என்ற கேள்விக்கு, வெயிட் பண்ணுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் பிசியாக உள்ள மாதிரி தெரிகிறது. அவங்க ஃப்ரீ ஆகிட்டு வருவாங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம் என தெரிவித்திருந்தார். 


இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? என்றும், பாஜக ஏன் பெட்ரோல்,கேஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண