சேலம் மாநகர காவல்துறை சார்பில் வட மாநில தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு "Migrant Care" என்ற பிரத்தீக செயலியினை சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் விஜயகுமாரி துவக்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர். வதந்திகளை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் நம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை மற்றும் சோனா கல்லூரி இணைந்து வடமாநில தொழிலாளர்களுக்கான செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக இந்த செயலி மூலம் காவல்துறைக்கு தகவல் அனுப்பலாம்.

வட மாநில தொழிலாளர்களுக்கான இந்த பிரத்யேக செயலியினை சேலம் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து வட மாநில தொழிலாளர்களின் செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியை உருவாக்கிய சோனா கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இதேபோன்று சேலம் மாநகர காவல்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களின் முதலாளிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கான இலவச உதவி தொலைபேசி எண் வெளியிடப்பட்டது.

வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரம் தொடர்பு கொள்ளும் வகையில் உதவி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா, வட மாநில தொழிலாளர்களை நம்பிக்கை அளிக்கும் வகையில் ஹிந்தியில் பேசி காவல்துறையினரின் ஆதரவை தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, "சேலம் மாநகரப் பகுதியில் பணிபுரியும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது எங்களது கடமை. உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் 24 மணி நேரமும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். வட மாநில தொழிலாளர்கள் எந்தவித பயமும் இன்றி தங்களது வேலையை செய்யலாம். நீங்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளதை உங்களது உறவினர்களிடம் தெரியப்படுத்துங்கள். உங்களை யாரும் இங்கு தொந்தரவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது பொது இடத்தில் உங்களுக்கு யாராவது தொந்தரவு செய்தால் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுக்கவும். உங்களுக்காக தமிழக அரசு, டிஜிபி போன்ற உயர் அதிகாரிகள் தலைமையில் உங்கள் பாதுகாப்பிற்காக எங்களால் முடிந்த வரை முயற்சி எடுத்து வருகிறோம். உங்களிடம் இருந்தும் எங்களுக்கு சில உதவிகள் வேண்டும். அதாவது நீங்கள் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.  உங்களுக்குள் வரும் சண்டைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு” என்று பேசினார்.

Salem City IS office

94981 00945

0427 222 0200

Control Room

0427 221 0002

9498181218

Social media

9087200100