தூத்துக்குடியில் தனியார் பங்களிப்புடன் சைனிக் பள்ளி தொடங்கப்பட உள்ளதாக, மத்திய அரசு தகவல்
தெரிவித்துள்ளது.


சைனிக் பள்ளிகள்:


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கான முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


இதுகுறித்து பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:


''அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதில் 18 புதிய சைனிக் பள்ளிகளைத் தொடங்க சைனிக் பள்ளிகள் சங்கம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பின் கீழ் சைனிக் பள்ளி தொடங்கப்படுகிறது.


கூட்டு முறையில் புதிய சைனிக் பள்ளிகளைத் திறப்பதற்கான தகுதிகளைப் பொறுத்தவரை, சைனிக் சங்கத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அங்கீகரிக்கப்பட்ட துணைச் சட்டங்களுக்கு இணங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்''.


இவ்வாறு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.



திருப்பூரில் சைனிக் பள்ளி


தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். மத்தியப் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து, உண்டு உறைவிடப் பள்ளியாகும்.  மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின்படி இந்தப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது.


சேர்க்கை எப்படி?


6ஆம் வகுப்பில் சேர, மாணவர்களின் வயது 12-க்குள் இருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர 15 வயதுக்குள் இருக்க வேண்டும். சைனிக் பள்ளியில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வில் ( AISSEE) வெற்றி பெற்று, நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.


இட ஒதுக்கீடு 


சைனிக் பள்ளியில் எஸ்சி பிரிவினருக்கு 15 விழுக்காடும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 விழுக்காடும் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்களுக்கு, 50 சதவீத அளவுக்கு ஆண்டு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.