மாநில அந்தஸ்து விவகாரத்தில் ரங்கசாமி தற்போது நீலிகண்ணீர் வடிக்கிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


கடந்த காலங்களில் காங்கிரஸ் சார்பில் சிறப்பு மாநில அந்துஸ்து கேட்டோம். அது முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். 2011-ம் ஆண்டு மாநில அந்தஸ்து கோஷத்தை முன்வைத்து வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, ஆட்சியின் 5 ஆண்டுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது மாநில அந்தஸ்து கோஷத்தை ரங்கசாமி மீண்டும் கையில் எடுத்துள்ளார். சமூக அமைப்பினர் ரங்கசாமியிடம் மாநில அந்தஸ்து கோரிக்கை மனு அளித்த போது, நிர்வாகத்தில் கோப்புகளை அனுப்பினால் அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். காலதாமதம் செய்கின்றனர் என புலம்புகிறார்.


மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பங்கேற்ற விழாவிலும், நிர்வாக விஷயத்தில் மத்திய அரசு தடையாக இருப்பதாகக்கூறி ஆதங்கப்பட்டார். 2016 முதல் 2021 வரை காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை மாநில அந்தஸ்து வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்து கட்சி கூட்டத்தையும், டெல்லியில் பிரதமர், மத்திய மந்திரிகள் சந்திப்பையும் என்ஆர்.காங்கிரஸ் புறக்கணித்தது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுக்கு பிறகு, தற்போது மாநில அந்தஸ்து வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்துகிறார். பா.ஜ க - என்ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என பதில் தரப்பட்டது.


மாநில அந்தஸ்திற்காக ரங்கசாமி என்ன முயற்சி செய்தார்? வெறுமனே புலம்பினால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? புதுவை ஆளுநர், முதலமைச்சரோடு இணைந்து செயல்படுவதாக கூறுகிறார். ஆனால் ரங்கசாமி இடையூறு விளைவிப்பதாக கூறுகிறார். இதில் எது உண்மை? ரங்கசாமிக்கு தெம்பும், திராணியும் இருந்தால் கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும். மத்திய அரசை எதிர்த்து அவர் போராட தயாரா, முன்னாள் ஆளுநர் கிரண்பேடி விஷம் கொடுத்து கொன்றார், தற்போதைய ஆளுநர் தமிழிசை வெல்லம் கொடுத்து கொல்கிறார். இதுதான் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ரங்கசாமி தற்போது நீலிகண்ணீர் வடிக்கிறார் என முன்னால் முதல்வர் நாராயணசாமி கூறினார்.