இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோல், கடந்தாண்டு சத்குரு தான் வரைந்த ஓவியங்களை இணையத்தில் விற்பனை செய்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.11.54 கோடியை வழங்கினார்.
மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம் வழங்கி அவர்களின் பசியை போக்கினர். மேலும் மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் பாதுகாப்பு உடை போன்ற உதவிகளை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.