ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் நடத்திய உண்ணாவிரத போராட்டம்  அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ராஜஸ்தானில் முதல்வர் அஷோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. உள்கட்சிப் பூசல்களுக்கு பெயர்போனது காங்கிரஸ் கட்சி. கட்சியின் தலைமையின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படாமல் அவர்களை மீறி உள்ளுக்குள் நிர்வாகிகள் அடித்துக்கொள்வது காங்கிரஸ் கட்சியில் எல்லா மாநிலங்களிலும் வழக்கம். குறிப்பாக தேர்தல் வரும் சமயங்களில் இந்த உள்கட்சிப் பூசல் பூதாகரமாக வெடிக்கும். அதேபோலவே, ராஜஸ்தான் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இரு முக்கியத்தலைவர்களுக்கு இடையில் வெடித்திருக்கும் மோதல் அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 


ராஜஸ்தானில் நடைபெற்ற வசுந்தரா ராஜே தலைமயிலான பிஜேபி அரசில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவான சச்சின் பைலட் வலியுறுத்தி வந்தார். ஆனால், ராஜஸ்தானை ஆளும், அஷோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக சச்சின் பைலட் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


கெலாட் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் முடிவை சச்சின் பைலட் கைவிட வேண்டும். ஏதாவது மனக்குறைகள் இருந்தால் அதை கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்குவது கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சச்சினை எச்சரித்திருந்தனர். ஆனால், எச்சரிக்கைகளையும் மீறி இன்று உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தார் சச்சின் பைலட். பின்னணியில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன், ஷகீத் ஸ்மரக் ஸ்தல் என்ற இடத்தில் ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்தை நிறைவு செய்தார் சச்சின் பைலட். 


ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் யார் பெரிய ஆள் என்ற அதிகார மோதலில் சச்சின் பைலட்டின் இந்த நடவடிக்கை அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் என்ற இடத்தை நோக்கி காய் நகர்த்தி வரும் நிலையில், அதற்கு தடையாக இருக்கும் அஷோக் கெலாட்டை ஓரம் கட்ட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சயினரே குற்றம்சாட்டுகின்றனர். 


அஷோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதல் ராஜஸ்தானில் பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.