பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட ‘சாட்டை’ துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை போடுவது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.






பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் சில வாரங்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், தனது ‘சாட்டை’ யூடியூப் தளத்தில் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். இந்த வீடியோதான் பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைவதற்கு காரணம், பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருச்சி தில்லை நகரில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு சென்ற சைபர் குற்றபிரிவு ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார் அவரை நேற்று (19-12-2021) கைது செய்தனர். பின்னர், சாலை மார்க்கமாக திருவள்ளூர் அழைத்து வந்து, நீதித்துறை நடுவரிடம் ஆஜர்படுத்தி வரும் 03-01-2021ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.



சாட்டை துரைமுருகன்


இந்நிலையில், மீண்டும் மீண்டும் கலவரத்தை தூண்டும் விதமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், இருதரப்பிற்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசிவரும் ‘சாட்டை’ துரைமுருகனை சில மாதங்களுக்கு சிறையை விட்டு வெளியில் வராதபடி இருக்க அவர் மீது ‘குண்டர் தடுப்பு’ சட்டத்தை பிரயோகப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.






ஏற்கனவே பிணையில் வரமுடியாத 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், அவரது முந்தைய வழக்குகளையும் காரணம் காட்டி குண்டர் சட்டத்தை பயன்படுத்த காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் ‘சாட்டை’ துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.