கோவையில் ஓட்டுரிமை இல்லை என பாஜக தொண்டர்கள் போராடிய சம்பவத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சாடி எஸ்.வி.சேகர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஒருமாத காலமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி தொடங்கி முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டு வருகை தந்தனர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சில தொகுதிகள் பலருக்கும் வாக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கோவை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகள் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 


இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் போட்டியிடும் கோவை தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு முடிந்த இரு தினங்களில் கோவையில் பாஜகவினர் மற்றும் பீப்புள் ஆஃப் அண்ணாமலை என்ற குழுவை சேர்ந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நியாயம் கேட்டு களமிறங்கிய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரின் கையில் ஓட்டு போட்டதற்கான அடையாள மை வைக்கப்பட்டிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பாஜகவினரை சரமாரியாக இணையவாசிகள் வறுத்தெடுத்தனர். 






ஆனால் இதுதொடர்பாக தேர்தல் அலுவலர் அளித்த விளக்கத்தில்,  கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண், தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை அணுகலாம் எனம் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இந்த கோவை போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், “ ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா? தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம்” என பெயர் குறிப்பிடாமல் பாஜக தலைவர் அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்துள்ளார்.