சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் ரூ.75 லட்சம் பணம் வசூலித்த வழக்கில், தனது கணவருடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவர் முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினர் ஆவார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் சரோஜாவிற்கு உதவியாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் சரோஜா அமைச்சராக இருந்தபோது சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதற்காக 18 பேரிடம் தான் ரூ.75 லட்சம் பணம் வசூல் செய்து அவரிடம் கொடுத்ததாகவும், ஆனால் இதுவரை அவர் பணியும் வழங்கவில்லை, கொடுத்த பணத்தை திரும்பவும் தரவில்லை எனவும், தான் மற்றவர்களிடம் வசூல் செய்து கொடுத்த 75 லட்சம் ரூபாய் பணத்தை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி செய்துவிட்டதாகவும், அந்த பணத்தை திரும்ப பெற்று தரவும் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் சரோஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப்புகாரின் பேரில் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து, மனு இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோது, சரோஜா தரப்பில் ஆஜரான வக்கீல், மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டார். இதன்காரணமாக இந்த வழக்கின் விசாரணை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு வரும் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், தான் தொடுத்த வழக்கின் விசாரணக்கு ஆஜராகாமல் இருக்கவும், கைது நடவடிக்கைக்கு பயந்தும் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று குணசீலன் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் இல்லை என்றும், நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன் ஜாமீன் மனு மீது கொடுக்கும் தீர்ப்புக்கு பிறகு போலீசாரின் நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்