Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.6000 வெள்ள நிவாரணம்:
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் குறிப்பாக சென்னையின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. ரேசன் கார்டு வைத்திருக்கும் நபர்களை டோக்கன் மூலம் நியாய விலைக் கடைகளுக்கு குறிப்பிட்ட நாளில் வரவழைத்து பணம் வழங்கப்பட்டது.
சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் இங்குள்ள முகவரியில் ரேஷன் கார்டு இல்லாமல் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது. இவர்கள் அனைவருமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்னும் கிடைக்கலையா?
அதன்படி, ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர். உரிய வீட்டு முகவரி சான்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ரேசன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் ரேசன் கார்டு இல்லாத 4.90 லட்சம் பேர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை 6000 ரூபாய் நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை.
நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், இன்று விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
முதற்கட்ட பட்டியலில் நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு முதலமைச்சர் பிறந்தநாளான இன்று அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் அரசு தரப்பில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
HBD CM Stalin: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்! பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!