HBD CM Stalin: பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்:
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். இதனிடையே அவர் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை:
இவருக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்தினார். இவருடன் டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதன்பின், தனது மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் ஸ்டாலின்.
அரசியல் தலைவர்கள் வாழ்த்து:
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்”என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புத் தோழர் மு.க. ஸ்டாலின். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் முடிவில்லாத மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளை விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.