Minister Periyakaruppan: விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். 


விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்:


ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500  கோடி வட்டியில்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன.


வேளாண் கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.


அதன்படி, 2023-24 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை) அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை (நிலை) எண். 168, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 18.12.2023 இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டிற்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ. 1500 கோடி (ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எனவே, கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க


Chandrababu Naidu: ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு யாகம்..! அதிரடி திட்டங்களுடன் ஜெகன் மோகன் - ஆந்திர அரசியல் கள நிலவரம்


Udhayanidhi Stalin:’நிதியைத்தான் கேட்டேன்.. தவறாக பேசவில்லை ’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் உதயநிதி