ஒரு விபத்து நடைபெறும் போது, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை விட, அதிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்கிற மனநிலை பெரும்பாலானோரிடம் இருக்கிறது. அது விழுப்புரத்தில் இன்று காலை நடந்த விபத்திலும் தொடர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து விழுப்புரம் தனியார் கம்பெனிக்கு 20 டன் பாமாயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. டேங்கர் லாரியை சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(52), என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். டேங்கர் லாரி திண்டிவனம் அடுத்த ஜக்காம் பேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி சர்வீஸ் சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்தது.



 

இதில் லாரியின் டேங்கரில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் பாமாயில் சாலையில் கொட்டி  பாலத்தின் கீழ் குளம் போல் தேங்கி நின்றது. இந்த தகவல் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் பரவியது. ஒரு பெருங்கூட்டம் சம்மந்தப்பட்ட இடத்திற்கு ஓடி வந்தது. உடனே தன்னை காப்பாற்ற தான் வருகிறார்கள் என ஆவலோடு டேங்கர் லாரி டிரைவர் காத்துக் கொண்டிருக்க, வந்த அனைவரும் டிரைவரை தாண்டி டார்ன் அடித்து ஆயில் கொடிடய இடத்திற்கு ஓடினர்.

‛நான் இங்கே இருக்கேன்... இவங்க எங்கே ஓடுறாங்க...’ என டிரைவருக்கு ஒரே குழப்பம். பிறகு தான் தெரிந்தது வந்தவர்கள் தன்னை காப்பாற்ற வரவில்லை; பாமாயில் கைப்பற்ற வந்திருக்கிறார்கள் என. குடம் குடமாக பாமாயிலை பிடித்து குஷியோடு வீட்டிற்கு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம், இந்த பாமாயில் சமையல் செய்வதற்கு பயன்படாது. கம்பெனிக்கு எடுத்து செல்லப்படுகிறது என தெரிவித்தனர். இதனைப் பொருட்படுத்தாத பொதுமக்கள் மீண்டும் பல்வேறு பாத்திரங்களில் அதிக அளவில் பிடித்து சென்றனர்.



 

இதனால் தீயணைப்பு வீரர்கள், பாலத்தின் கீழே தேங்கி நின்ற பாமாயிலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.  அப்படியாவது பிடிப்பதை பொதுமக்கள் நிறுத்துவார்கள் என நினைத்தனர். ஆனாலும் அவர்கள் விட்டபாடில்லை. சரி இனி இது வேலைக்கு ஆகாது என அவர்களை விட்டு விட்டு, லாரியை மீட்கும் பணியில் இறங்கினர்.  இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இரண்டு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அப்புறப்படுத்தப்பட்டது. 

பிடித்துச் சென்ற பாமாயிலை பொதுமக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியாத நிலையில், அது பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றால், உடனே அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு  மேற்கொள்ள வேண்டும்.