ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்திடம் உள்துறைச் செயலாளர் அமுதா உறுதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் கடைசியாக 2013ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது 1.8 கி.மீ குறைந்தபட்ச தூரமாகக் கணக்கிட்டு, அதற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாயை அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 


மேலும், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு 3.50 ரூபாய் ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.


9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணம்


எனினும் அதற்குப் பிறகு ஆட்டோ கட்டணம், அடுத்தடுத்த விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. 9 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கும் சூழல் நிலவுகிறது. பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 


இதற்கிடையே ஓலா, உபர், ரேப்பிடொ உள்ளிட்ட தனியார் ஆட்டோ செயலிகள், செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இதையடுத்து, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.




ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்


இதை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மே மாதம் தொழிற்சங்கங்கள், பொது மக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. அதில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, 


இதையடுத்த, மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கவும், அரசே ஆட்டோ செயலி உருவாக்க வேண்டும் என்று கோரியும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், ஆட்டோ செயலியைத் தொடங்கவும் கோரிதமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆகியோர் ஆக. 28ஆம் தேதி  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை, நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதற்கு பதிலளித்த அமுதா ஐஏஎஸ், ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அரசு சார்பில் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்களிடம்  தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Quarterly Exam: 6 முதல் 12ஆம் வகுப்பு வரை.. காலாண்டுத் தேர்வில் அதிரடி மாற்றம்- விவரம் இதோ!