தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என பாஜக கோவை வடக்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை கொங்குநாடு என்ற யூனியன் பிரதேசமாக உருவாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. கொங்குநாடு பிரிவினைக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகின்றன. திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொங்குநாடு பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதேசமயம் கொங்குநாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கொங்குநாடு தனி மாநிலமாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கொங்குநாடு புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கெளரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தை பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநில மறுசீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை புதிய மாநிலமாக கொங்குநாடு உருவாக்க வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல தேசிய பக்தி மிக்க உணர்ச்சி முழக்கமான ஜெய்ஹிந்த் -ஐ திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சட்டமன்ற கூட்டத்தில் அவமதித்தற்கும், அதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசிற்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு சென்னை மண்டலங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோவை மாவட்டத்திற்கு பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் விரைவாக தடுப்பூசி முகாம் நடத்தி மாநில அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல அவிநாசி மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்து அன்னூர் என்ற புதிய சட்டமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும் எனவும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.