சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில், கூட்டுறவு வங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.


அதே சமயத்தில், இந்த நகைக்கடன் தள்ளுபடி யார், யாருக்கு பொருந்தும் என்பதையும் தமிழக அரசு விளக்கியுள்ளது. நகைக்கடன்கள் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.




யார் யாருக்கு தள்ளுபடி? : 


இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்க 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதியான நபர்களை கண்டறிவதற்காக குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள், அவர்களின் நகைக்கடன் பற்றிய விவரம், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்பட 51 தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கணினி மூலம் தொகுக்கப்பட்டு விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த பகுப்பாய்வுகளின் படி, தகுதியில்லாத சில நபர்களுக்கு 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்பதையும் முதல்வர் நேற்று சட்டசபையிலே குறிப்பிட்டிருந்தார்.


யாருக்கு கிடையாது?


உதாரணமாக, 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட  அல்லது ஒன்றுக்கம் மேற்பட்ட மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் இருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 சவரனுக்கு மேல் நகையீட்டின் பேரில் கடன் பெற்றவர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையை பெற்று அவற்றை பயன்படுத்தி நகைக்கடன் பெற்றவர்களுக்கு முதல்வரின் அறிவிப்பின் கீழ் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது.




இதுதொடர்பான விரிவான வழிமுறைகளை கூட்டுறவுத்துறை சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த கடன் தள்ளுபடி காரணமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


முதல்வரின் எச்சரிக்கை


திமுகவின் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, பலரும் தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்திலே கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனால், முறையற்ற வகையில் தள்ளுபடி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நகைக்கடன் பெற்றவர்கள், முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்கள் மீது தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.