இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 64 ஊரக காவல் துறையினருக்கும், 56 மாநகர காவல் துறையினருக்கும் என 120 காவல் துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 453 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

அதேபோன்று, சிறப்பாகச் செயல்பட்ட 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆசிரியர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், சிறப்பாகச் செயல்பட்ட 6 மருத்துவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 29 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், சிறப்பாகச் செயல்பட்ட 9 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 22 உறுப்பினர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள், எல்லைப்போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கதர் ஆடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: Republic Day 2025 Parade: குடியரசு தின அணிவகுப்பு - “பிரளய், சஞ்சய்” உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள், கலாச்சாரம்
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், சேலம் சரக டிஐஜி உமா, சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசத்திற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக்கொடியனை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சேலம் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: TN Weather: இன்னும் போகலையா.! கடைசியா, 5 மாவட்டங்களில் கனமழை கொட்டிவிட்டு போகும் வடகிழக்கு பருவமழை
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர ஆணையாளர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.