நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகள் :



 * நீட் தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறலாம். 


* பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்பையில் மருத்துவ மாணவ சேர்க்கையை நடத்தலாம். 


* நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும். 


* நீட் தேர்வு வந்த பிறகு தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது குறைந்துள்ளது. நீட் தேர்வுக்கு பின் எம்பி பி எஸ் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி  மாணவர்களின் சதவீதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது. 


* அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த பத்து ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களின் சதவீதம் 57.13% முதல் 49.91% ஆக குறைந்தது. அதே நேரம் நகர்ப்புற மாணவர்களின் சதவீதம் 42.87% முதல் 50.09% ஆக உயர்ந்துள்ளது.


* நீட் அறிமுகம் ஆன பிறகு, கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 12% குறைந்து, நகர்புற பகுதிகளில் 12% சேர்க்கை அதிகமாகியுள்ளது. கிராமபுறங்களில் நீட் பயிற்சி மையங்கள் இல்லாததே இதற்கு காரணியாக இருக்கலாம்.


* நீட் மட்டும் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமடையும். தமிழ்நாட்டின் சூழல் சுதந்திரத்துக்கு முந்தைய சூழலுக்கு தள்ளப்படும்.


 






தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர்.


முன்னதாக, நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருப்பதாக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டிருந்தார். நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு அமைத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு மேற்கொண்டது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏ.கே.ராஜன், ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. வேண்டும் என வெகுசிலர் மட்டுமே கூறியுள்ளனர்” என்று கூறினார்.