ஜூன், 23 - 2016 ஆம் ஆண்டு.... வழக்கமான நாட்களை போன்ற அந்த நாளும் அமைதியாக விடிந்தது. ஆனால், வழக்கத்தை போல் அமைதியாக முடியவில்லை. காரணம், சுவாதி என்ற அந்த இளம் மங்கையின் மரணம்.
விடியற் காலையிலேயே பரபரப்பாக இயங்க தொடங்கும் சென்னை மாநகரின் முக்கிய ரயில்நிலையமான நுங்கம்பாக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர். அவர்களுள் ஒருவராக சுவாதியும் அங்கு நின்று கொண்டிருந்தார்...... இவர்களுடன் அந்த கொடூரனும் நின்றுகொண்டிருந்தான்....
அப்போது ரயிலை எதிர்பார்த்துக்கொண்டிருந்த சுவாதிக்கும், மக்களுக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மக்களோடு மக்களாக நின்றுகொண்டிருந்த அந்த கொடூரன் தான் வைத்திருந்த, அரிவாளால் சுவாதியை வெட்டினான்.... இரத்தம் சொட்ட சொட்ட சுருண்டு விழுந்தார் சுவாதி....
சுவாதி கீழே விழுவதற்குள், அந்த கொடூரன் அங்கிருந்து தப்பிவிட்டான்... பரபரப்பானது சென்னை... இல்லை தமிழகமே பரபரப்பானது... இன்று மணிக்கொருமுறை தொலைக்காட்சிகளில் வரும் பிரேக்கிங் நியூஸ்கள் போல் அன்று அனல் பரந்தன. இன்போஸிஸ் செல்ல காத்திருந்து, இன்னுயிரை இழந்த சுவாதிக்கு அனுதாபங்கள் அதிகரித்தன. காவல்துறையும் பரபரப்பானது.... வழக்கு சென்னை மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியாக முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
விசாரணை தொடங்கியது. அதற்குள், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோர் திடீர் நீதிபதிகளாக ஆஜராகி கொலையை செய்தது பிலால் மாலிக் தான் என்று பிரச்சனையை வேறு கோணத்தில் திருப்ப முயன்றனர்.
ஒருவார மர்மம்.... யார் கொலையாளி என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு...! வந்தது ஜூன் 1 ஆம் தேதி.... நெல்லை மீனாட்சிபுரத்துக்கு விரைந்தது தனிப்படை... நள்ளிரவு தொலைக்காட்சிகளில் மின்னியது பிரேக்கிங் செய்திகள்... சுவாதி கொலையாளி ராம்குமார் கைது என்று....
அடுத்ததாக யார் இந்த ராம்குமார் ? என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்... ஜூலை 2 ஆம் தேதி ராம்குமார் தான் குற்றவாளி என ஒற்றைக்காலில் நிற்கிறது காவல்துறை. ஜூலை 5 ஆம் தேதி ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் இந்த கொலை வழக்கை இழுத்துமூடி விட காவல்துறை நினைக்க, மறுபக்கம் ராம்குமாருக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.
2 மாதங்கள் கடந்தன..... செப்டம்பர் 18 ஆம் தேதி.... மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுவாதி ராம்குமாரை மறந்திருந்த நேரம் அது..... திடீரென மீண்டும் பிரேக்கிங் செய்திகளில் ராம்குமாரின் படம்.... அவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என்று..... இதற்கு நீதி கேட்டு பலர் போராடினாலும், அவையனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக, ராம்குமார் மரணத்தை வைத்து, சுவாதி கொலை வழக்கையும் இழுத்து மூடியது காவல்துறையும், நீதித்துறையும்....
இந்த நிலையில் தான் ராம்குமாரின் வழக்கறிஞரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ராஜராஜன் சுவாதி, ராம்குமார் மரணத்துக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவலை தெரிவித்து இருக்கிறார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் ராம்குமார் சுவாதியை கொல்லவில்லை என்றும், சுவாதியை கொலை செய்ததன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இருப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட பெண் வழக்கறிஞர் சுவாதிக்காகவும், ராம்குமாருக்காக அவரது அனுமதி இல்லாமலேயே அந்த பெண் வழக்கறிஞரின் கணவரும் ஆஜரானது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதனால் நான் இந்த வழக்கை கையில் எடுத்தேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், சுவாதியை கொலை செய்தது பெங்களூருவிலிருந்து வந்த கொலையாளிகள் என்று அப்போதே தெரிவித்தார். சுவாதியை கொன்றவர்களே ராம்குமாரை கொன்றனர். ராம்குமாரை கொன்றவர்களே ஜெயலலிதா மரணத்துக்கும் காரணம். சுவாதி மரணத்துக்கான காரணத்தை அறிந்தாலே ஜெயலலிதா மரணத்துக்கான காரணத்தை அறிய முடியும்.
சுவாதி கொலையை மூடி மறைக்கிறார்கள். சுவாதியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தாலே உண்மை தெரியும். சாதாரண அரிவாளை வைத்து அதுபோல் வெட்ட முடியாது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை போல் ஸ்வாதி கொல்லப்பட்டு இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்படுத்தும் வாளை கொண்டு வெட்டினால் தான் இதுபோன்ற பெரிய காயம் ஏற்படும். சுவாதியை ஒருவரால் கொன்றிருக்க முடியாது. இதில் 4 அல்லது 5 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இருவர் சுவாதையை பிடித்துக் கொண்டு மேலும் இருவர் வெட்டி இருக்க வேண்டும். ஒருவரால் சுவாதியின் வாயின் வலது மற்றும் இடது புறங்களில் ஒரே மாதிரியாக வெட்ட முடியாது. வாயின் இருபுறங்களிலும் ஒரே மாதிரி வெட்டப்பட்டு உள்ளது. ராம்குமாரை விட சுவாதியின் உயரம் அதிகம்.
குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் இந்த கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை காப்பாற்றினார். அதற்கு தான் ராம்குமாரை கைது செய்தார்கள். முதலில் தொலைக்காட்சியில் முத்துக்குமார் என பிரேக்கிங் செய்தியை கொடுத்தார்கள். அனைத்து ஊடகங்களுமே அப்படியே செய்தி வெளியிட்டனர். அதன்பிறகே, ராம்குமார் என மாற்றினார்கள். போலீசே அவரது கழுத்தை அறுத்தது. ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை என்பது நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
கொலையை நேரில் கண்டவர்கள் மிரட்டப்பட்டனர். இது தொடர்பாக 2 முறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஏன் 2 FIR போட வேண்டும்.? ரயில்வே போலீஸ் கொலையாளியை நெருங்கியதாக கூறியது. அதை ஏன் சட்டம் ஒழுங்கு போலீசிடம் மாற்றினர்.? ரயில்வே போலீஸின் விசாரணையை ஏன் கணக்கில் எடுக்கவில்லை. சுவாதியின் குடும்பமும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டது. அவர் கொல்லப்பட்ட உடனே நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் வழக்கை திசை திருப்பி பொய்யான தகவலை பரப்பி மதக்கலவரத்தை ஏற்படுத்த முயன்றனர்.
ராம்குமார் சிறையில் வயரை கடித்து தற்கொலை செய்யவில்லை. அவரிடம் 2 முறை பேசி இருக்கிறேன். அவர் சுவாதியை தான் கொலை செய்யவே இல்லை என்று சொன்னார். பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு அதிகாரி உதவியுடன் ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்க சிலர் முயன்றனர். அதே இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதிக்கு இந்த விசயம் தெரிந்ததால் தான் அவரை குறிவைத்து கொன்றனர். இதற்கான ஆட்களை ஏற்பாடு செய்தது பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தான். (கடந்த 2016 ஆம் ஆண்டே சுவாதி கொலையில் கருப்பு முருகானந்தத்துக்கு தொடர்பு இருப்பதாக பிரபல தனியார் இதழின் இணையதளத்தில் செய்தி வெளியானது).
சுவாதி கொலை வழக்கில் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என ராம்குமாரை கொன்றார்கள். ராம்குமார் கொலை வழக்கை நான் கையில் எடுத்த உடனே உளவுத்துறை என்னிடம் விசாரணை நடத்தியது. ஜெயலலிதாவின் பால்ய தோழி கீதாவிடம் நான் பேசினேன். அவர் ஜெயலலிதா மரணத்தில் கருப்பு முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசனுக்கும் தொடர்பு உள்ளது. அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த உண்மைகள் ஜெயலலிதாவுக்கு தெரியவந்ததால் தான் அவரை கொன்றதாக கீதா தெரிவிக்கிறார்.
ஜெயலலிதாவை கொலை செய்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் இருக்கிறது. இந்த கொலை வழக்குகளை மூடி மறைக்க மத்திய பாஜக அரசும், அப்போதைய மாநில அதிமுக அரசும் முயன்றன. ராம்குமார் வயரை கடித்து இறக்கவில்லை. கைதிகள் தொடும் வகையில் வயர் புழல் சிறையில் இல்லை. பிரேத பரிசோதனையில் அவரது மூளை, நாக்கு, கல்லீரல் என அனைத்து உறுப்புகளில் உள்ள திசுக்களை ஆய்வு செய்ததில் மின்சாரம் தாக்கியதற்கான ஆதாரம் இல்லை என்ற அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துவிட்டனர்.
ராம்குமார் வயரை கடித்து இறக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. ராம்குமார் கொலை வழக்கை விசாரிக்காமலேயே மூடி மறைத்துவிட்டனர். அது வெளிவந்தால் உண்மை அம்பலமாகும். இந்த வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” என்றார்.
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு பலம்... இதோ முழு விபரம்...
உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!