ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை காவல்துறையினர் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் திருச்சிக்கு அழைத்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை ஒளிப்பரப்பியது தொடர்பாக முன் ஜாமீன் கோரி ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


கடந்த மே 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே குமரேஷ் பாபு, சில யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடுகளை நியமிக்க நேரமிது” என்று தெரிவித்தார். 


ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அவருக்கு சில கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்தது. அப்போது ரெட் பிக்ஸ் எடிட்டர் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் 1988 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


சவுக்கு சங்கருடனான நேர்காணலின் போது ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட்டும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குறிப்பிட்டது உயர்நீதிமன்றம். இதையடுத்து, இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் வேண்டும் என பதிவு செய்திருந்தார். 


நீதிபதி, ஜெரால்டின் நேர்காணலின் தன்மையை விமர்சித்தபோது, ஜெரால்டு, சவுக்கு சங்கரை புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிட தூண்டியிருக்கலாம் அல்லது ஊக்குவித்திருக்கலாம் என்றும், ஜெரால்டின் பத்திரிகை அனுபவம் அவரது செயல்களை நியாயப்படுத்துகிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் ஜெரால்ட் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டது. 


“ இதைத்தான் நீங்கள் நேர்காணல் என்று அழைக்கிறீர்களா? மனுதாரர் பெலிக்ஸிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் அப்படி பேசும்போது, நீங்கள் அதை தடுக்காமல், ஊக்குவித்தீர்களா..? என்று கேள்வி எழுப்பியது. 


 கூடுதல் அரசு வக்கீல் கோரிக்கையின்படி, ஜெரால்டின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்த நிலையில், நேற்று டெல்லியில் தமிழ்நாடு காவல்துறையினர் ஜெரால்டை கைது செய்தனர்.