வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.


இன்று கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தருமபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.




நாளை (16-ந் தேதி) நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும், நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மேலும் வலுப்பெற உள்ளது. 


சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி, புத்தன் அணை ஆகிய பகுதிகளில் 22 செ.மீ. மழையும், களியலில் 20 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


மத்திய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தெற்கு அந்தமான் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.  இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.




முன்னதாக, வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கனமழை பல மாவட்டங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த 9-ந் தேதி இரவு பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி மற்றும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என்று அந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியிலும், பாதிப்புக்குள்ளாகிய மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் பணியிலும் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். 


‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண