தமிழகத்தில் மீண்டும் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் மழையானது அடுத்தக்கட்ட ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறிவைத்த மழை தற்போது வட மாவட்டங்களை நோக்கி நகரவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (25-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இன்று (26-11-2025) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. 

Continues below advertisement

இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக நாளை (27-11-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

நெருங்கி வரும் புயல் சின்னம்

நாளை மறு தினம் (28-11-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Continues below advertisement

வருகிற 29ஆம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

 

29,30ஆம் தேதிகளில் ரெட் அலர்ட்

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

30-11-2025: வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.