தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. எனவே ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என களம் இறங்கியுள்ளது. அதிமுகவோ இழந்த ஆட்சியை மீண்டும் கைப்ற்ற வேண்டும் என காய் நகர்த்தி வருகிறது. தவெக தலைவர் விஜய்யோ நான் தான் அடுத்த சி.எம் என நம்பிக்கையோடு காத்துள்ளார். இந்த பரபரப்பிற்கு இடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது.

Continues below advertisement

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் அப்போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் கெடு விதித்திருந்தார். அடுத்தாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் சந்தித்து பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த எடப்பாடி, செங்கோட்டையனை கட்சியில் இருந்து தூக்கியடித்தார். எனவே அடுத்தக்கட்டமாக செங்கோட்டையன் என்ன செய்யப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், முதல் கட்டமாக தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார் செங்கோட்டையன்.  அடுத்தாக தவெக அல்லது திமுக என இரண்டு வாய்ப்புகள் செங்கோட்டையன் முன் உள்ளது.

செங்கோட்டையனை திமுகவிற்கு இழுக்க திட்டம்

 செங்கோட்டையனை திமுகவில் இணைக்க அமைச்சர் சேகர்பாபு மூலம் ஸ்கெட்ச் போட்டது திமுக தலைமை, இன்று காலை செங்கோட்டையன் வீட்டிற்கே நேரடியாக சென்று சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்ததாக தலைமைச்செயலகம் வந்த செங்கோட்டையனை தனியாக சந்தித்தும் பேசியிருந்தார். ஆனால் செங்கோட்டையனோ திமுகவின் ஆசை வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. எனவே தவெக தான் செங்கோட்டையனின் முதல் சாய்ஸ்.  இன்றோ அல்லது நாளையோ தவெகவில் செங்கோட்டையன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

 

அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்

அதே நேரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் எப்போது டெல்லி சென்றாலும் அமித்ஷாவை சந்தித்து பேசுவது வழக்கம். அமித்ஷாவின் செல்லப்பிள்ளையாகவே செங்கோட்டையன் இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கூட அமித்ஷாவை சந்திக்க கிடைக்காத அனுமதி செங்கோட்டையன் கேட்ட அடுத்த நொடியே அனுமதி கிடைத்துவிடும்.

அப்படி தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போதும், அதிமுகவில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட போதும் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அமித்ஷாவின் ஆதரவாளராக உள்ள செங்கோட்டையன் தவெகவில் இணைய திட்டமிட்டிருப்பது விஜய்யை அரசியலில் இருந்து காலி செய்ய பாஜக போடும் திட்டம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.