தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற இரவு அன்று சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குசாவடி எண் 92-இல் வாக்குப்பதிவு முடிந்ததும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, ஊழியர்கள் கொண்டு சென்றது பழுதான விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கமளித்திருந்தார்.
பின்னர் அவர்களே , விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், விதிமீறல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரி கூறியிருந்தார்.
இந்நிலையில், வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக, வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92ல் வரும் 17ஆம் தேதியான இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவும் துவங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் வாக்கு பதிவு சதவீதம் குறைவு. அதிலும் ரத்து செய்யப்பட்ட வேளச்சேரி பூத்தில் மிகக்குறைவு. ஏன் ஓட்டு குறைந்தது? இன்று நடைபெறும் தேர்தலில் அதே ஓட்டுகள் பதிவாகுமா? இல்லை அதைவிட கூடுதல் ஓட்டு பதிவாகுமா? வேளச்சேரியின் நிலை என்ன என்பதை அறிய கள ஆய்வு செய்தது ABP நாடு.
மறுவாக்குப்பதிவு எப்படி வித்தியாசமானதோ அதே அளவிற்கு அது நடைபெற உள்ள வேளச்சேரி பகுதியும் பல வித்தியாசத்தை கொண்டிருந்தது. வேளச்சேரி சீதாராம் நகரில் உள்ள டிஏவி பள்ளியில்தான் ஓட்டு பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி எண் 92 அமைந்துள்ளது. இதில், 92 (M)ல் மட்டும் அதாவது ஆண்களுக்கான பூத்தில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பிரச்னைக்குரிய அந்த இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்ட பூத் ஆண் வாக்காளர்களுக்கானது. எனவே இன்றயை தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர். பெண்களுக்க ஓட்டு இல்லை. சரி, எங்கிருந்து இவர்கள் வரப்போகிறார்கள் என்று விசாரிப்போம் என பார்த்தால், அதலும் ஒரு டுவிஸ்ட்.
வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளியின் பக்கத்தில் ரீகல் பார்ம் கார்டன்ஸ் அபார்ட்மென்ட் வாக்காளர்களுக்கு தான் அந்த பூத். அங்குள்ள 548 ஆண் வாக்காளர்கள் தான் சம்மந்தப்பட்ட பூத்திற்கு பாத்தியப்பட்டவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் மறுதேர்தல் அறிவிப்புக்கு பின் நடந்த பிரசாரமும் அந்த அபார்ட்மென்டில் தான் நடந்துள்ளது. ஒரே இடத்தில் வாக்காளர்கள் இருப்பதால் வேட்பாளர்களுக்கு பிரசாரமும் எளிதாக இருந்தது.
தேர்தல் பறக்கும் படையினரும் ஒரே இடத்தில் வண்டியை போட்டு விட்டு கண்காணிக்கவும் வசதியானது. அந்த அபார்மென்டில் யாரையாவது பார்க்க செல்ல வேண்டுமானால் பறக்கும் படை, போலீஸ் கெடிபிடிகளை தாண்டி செல்வது கடினமாகவே இருந்தது. அந்த அளவிற்கு அபார்ட்மென்ட் கண்காணிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள வாக்கு எண்ணிக்கைக்கும் பதிவான எண்ணிக்கையும் அதிக வித்தியாசம் இருந்தது. இத்தனைக்கும் வாக்கு பதிவு நடைபெற்ற நாளன்று விடுமுறை நாள். அப்படி இருந்தே வாக்களித்தவர்கள் மிகக்குறைவு.
548 ஆண் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடியில், தேர்தல் அன்று 220 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதிலும் சிலர் வாக்களிப்பதற்காக வெளியூரில் இருந்து வந்து சென்றனர். இன்று விடுமுறை நாளும் கிடையாது. அப்படி இருக்கு கடந்த முறை வாக்களித்த 220 பேர் மீண்டும் வாக்களிப்பார்களா என்கிற சந்தேகம் ஒருபுறம் இருக்கிறது. சம்மந்தப்பட்ட அபார்ட்மென்டில் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அங்குள்ளவர்களுக்கு இயல்பான அச்ச உணர்வு உள்ளது. அங்குள்ள வாக்காளர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில் அதை விட அதிர்ச்சியாக இருந்தது.
‛நாங்க எங்க கடமையை செய்துட்டோம்... அதிகாரிகள் பண்ண தவறுக்கு நாங்க என்ன பண்ணுவோம். ஓட்டு போட வந்த பல பேர் இப்போ இங்கே இல்லை. நிறைய பேர் கொரோனா டைம்லயே சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்து பணியாற்றுகிறார்கள். அதில் ஒரு சிலர் தான் ஓட்டு போட வந்தாங்க. இங்க இருக்கிறவங்களே கொரோனா பயத்தில் வெளியே வர பயப்படுறாங்க. இன்னைக்கு எத்தனை பேரு ஓட்டு போடுவாங்கன்னு தெரியல,’ என்றனர்.
இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களை தமிழகம் சந்தித்திருந்தாலும், ஒரு அபார்ட்மென்டில் உள்ள வாக்காளர்களுக்கு மட்டும், அதுவும் ஆண் வாக்காளர்களுக்கு மட்டும் நடைபெறும் இந்த தேர்தல் சற்று வினோதமானதே. பார்க்கலாம் இந்த முறை எத்தனை ஓட்டுகள் பதிவாகிறது என்று.
மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ள வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, அமமுக சார்பில் சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ் பாபு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் எம். கீர்த்தனா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.