நகைச்சுவர் நடிகர் விவேக் சென்னை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி காலை 4.35 மணிக்கு காலமானார்.


நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் விவேக்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பனான விவேக்கின் மரணத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவை எனத் தெரிவித்த மயில்சாமி, மாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.


நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், ”கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே தனியார் மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்று ஏற்படலாம். ஆனால், அந்தத் தொற்று உயிரைக் கொல்லாமல் இருக்கத் தடுப்பூசி உதவும்" என்று தெரிவித்ததோடு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது