பழைய வாகனங்களுக்கு ஆர்சி மற்றும் தகுதி சான்றிதழ் கட்டணங்களை மாநில போக்குவரத்துறை அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 15 வருட பழைய வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் புதுப்பிப்பு மற்றும் தகுதி சான்றிதழ் ஆகியவற்றிற்கான கட்டணம் 3 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை அறிவிப்பின்படி இனிமேல் 15 வருட பழைய இருச்சக்கர வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் புதுப்பிக்க 1000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அந்தத் தொகை 300 ரூபாயாக இருந்தது. அதேபோல் 15 வருட பழைய ஆட்டோக்களுக்கான ஆர்சி புத்தக புதுப்பிப்பு கட்டணம் 600 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 15 வருட பழைய கார்களுக்கான ஆர்சி புதுப்பிப்பு கட்டணம் 600 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டு பழைய வாகனங்களுக்கான ஆர்சி புதுப்பிப்பு கட்டணம்:
வாகனம் | பழைய கட்டணம் | புது கட்டணம் |
இரு சக்கர வாகனம் | 300 | 1000 |
ஆட்டோ | 600 | 2,500 |
கார் | 600 | 5000 |
இறக்குமதி செய்த இருசக்கர வாகனம் | 2500 | 10,000 |
இறக்குமதி செய்த கார் | 5000 | 40,000 |
இவை தவிர வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலானவற்றின் ஆர்சி புதுப்பிக்க கட்டணமும் உயர்ந்துள்ளது. இந்தத் தொகை 2,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிப்பு. மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட கார்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் அவற்றிற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் அந்த கார்களின் ஆர்சி புத்தக புதுப்பிக்க 5000 ரூபாய்க்கு பதிலாக 40,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 15 வருட பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் பெரும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிளுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் 400 ரூபாயும், ஆட்டோக்களுக்கு 800 ரூபாயும், பெரிய ரக வாகனங்களுக்கு 1000 ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்துறையின் வாஹன் மென்பொருளில் இந்தப் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டே இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாநில போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளது தான் என்றும் போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் திடீரென 15 வருட பழைய ஆட்டோகளை புதுப்பிக்கும் கட்டணம் உயர்ந்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்போவதாக் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில் தற்போது இந்த சான்றிதழ் கட்டணங்களும் உயர்வது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணம் எதுவும் மாற்றமில்லாமல் அதே நிலையில் தொடர்கிறது. பழைய வாகனங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்