பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 


“கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக சிறைவாசிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்த வழக்கில் கடந்த 07.05. 2021 அன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2020ஆம் ஆண்டு இதே வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுக்களின் பரிந்துரைகளின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் 90 நாட்களுக்குப் பிணை வழங்க வேண்டுமென்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.


Ola electric scooter : ஒரே நாளில் ஒரு லட்சம் முன்பதிவு - ஒலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதனை..!
 
இந்நிலையில் நேற்று (16.07.2021) மீண்டும் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ’தனது ஆணையின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் எவரையும் இப்போது சிறையில் அடைக்கக் கூடாது, உச்சநீதிமன்றம் அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரையும் தொடர்ந்து பிணையில் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.




 


தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைத்த  உயர்அதிகாரக் குழு கடந்த 19.05.2021 ஆம் தேதி கூடி எடுத்த முடிவில் “ 19.05.2021 வரை 95 தண்டனை சிறைவாசிகளும் 708 விசாரணைக் கைதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒரு தண்டனை சிறைவாசியும் ஒரு விசாரணைக் கைதியும் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல சிறைப் பணியாளர்களில் 730 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 6 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
உச்சநீதிமன்றம் 16.07.2021 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில், “மாநில அரசுகள் சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளில் சிறைவாசியின் வயது, இணை நோய்கள் முதலான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனவா?’ என்பதை 22.07.2021 ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கூறியுள்ளது. எனவே சிறைவாசிகளைப் பிணையில் விடுவதென்பதில் சிறைகளில் உள்ள இட நெருக்கடியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள பிற அம்சங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
 
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு பேரறிவாளனுக்கு வழங்கியுள்ள சாதாரண விடுப்பை உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின்படி அது அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை’ நீட்டித்து, தொடர்ந்து அவரை பரோலில் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று மெத்தப் பணிவோடு  கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆட்சியில் அதற்கான சட்டமசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். இதனால் அவர்களின் விடுதலை தாமதமானது. இந்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamil Nadu Weather : தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்; 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!