வங்கிக் கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கினை தொடங்க அறிவுருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் சுமார் 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
இந்த வழிகாட்டுதல் குறித்த அறிவிப்பாணையில்,
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இந்த பயனர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் எண்ணை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே கூட்டுறவுத் தரவுகள் தெரிவிக்கின்றன. பயனர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பேலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
பயனர்களுக்கான வழிகாட்டுதல்
இந்த புதிய உத்தரவினை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பேலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும். அதன் பின்னர், அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து நான்கு நாட்களுக்குள் ரேஷன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்
ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேஷன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும் இவ்வாறு அந்த சுற்றரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.