தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், நேற்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.


அவரது மறைவு தமிழ்த்திரை ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், விவேக்கின் மறைவிற்கு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் ஐ.பி.எஸ். தன்னுடைய இரங்கலை இரங்கற்பாவாக வெியிட்டுள்ளார். அவர் விவேக் மறைவிற்கு எழுதிய கவிதையில்,


 




“ பகுத்தறிவுக்கும்


நகைச்சுவைக்கும் பசையாக இருந்தவன்….


ஜாதி மத


சமூக கேடுகளுக்கு


பகையாக இருந்தவன்….


கண்டதை எல்லாம்


சொல்லி… எள்ளி….


சிரிக்க வைக்காமல்


கருத்தை சொல்லி


சிரிக்க வைத்தான்…


சிந்திக்க வைத்தான்…


கிண்டல் கேலி


செய்வதிலும் கூட-


பிறர்மனம் புண்படாமல்


எல்லை கருத்திட்ட


நகைச்சுவை நாயகன்.


பசுமை கலாம்


திட்டத்தினால்


வெப்பச்சுமை


குறைத்தவன்…


வெடிச்சிரிப்பை


உருவாக்கி


மனச்சுமையை குறைத்தவன்..


இலட்சோப லட்சம்


மரக்கன்று நட்டவனை-


இன்று – இலட்சியத்தோடு


சேர்த்துப் புதைக்கின்றது


இரக்கமில்லா இயற்கை..


எங்கள் கண்ணீர்


உமக்கும் –


உமது செடிகளுக்கும்


காணிக்கை ஆக்குகிறோம்…


விண்ணோடு விவேக்..


மண்ணோடு பசுமை..”


இவ்வாறு அவர் தனது இரங்கற்பாவில் அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.