ராணிப்பேட்டையில் பள்ளி மாணவி ஒருவர், வகுப்பறையில் பாடத்தை கவனித்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக, மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகான காலத்தில், இம்மாதிரியான மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அச்சம் நிலவி வருகிறது. கடந்தாண்டு, பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர், பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திடீர் திடீர் ஏற்படும் மாரடைப்பு:
இந்த திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டுகிறது. முறையான வாழ்க்கைமுறையை பின்பற்றாமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராணிப்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் பாடத்தை கவனித்து கொண்டிருந்தபோது மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகள் ஈஷா அத்விதா, சுமைதாங்கி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
வகுப்பறையில் பகீர் சம்பவம்:
இம்மாதிரியான சூழலில், இவருடைய இளைய மகள் வழக்கம்போல் பள்ளிக்கு காலையில் சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஈஷா அத்விதா மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக பெற்றோர்கள் தயாரான நிலையில், காவேரிப்பாக்கம் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடலை பிரத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், ஏற்கனவே, மாணவிக்கு இருந்த இதய நோய் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது மாணவி பள்ளியில் மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: CSIR UGC NET 2024: தொடங்கிய சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பப் பதிவு; தேர்வு தேதி இதுதான்!