தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளர் ஸ்வாதி கொலை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி காலை அடையாளம் தெரியாத நபரால் ஸ்வாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு குறித்த மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது.
நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவசர அவசரமாக ஒரு இளைஞர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் ராம்குமார் எனவும் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் என்றும், விடுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் ஸ்வாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்துவந்ததாகவும், அவர் செல்லும் கோயிலுக்கு ராம்குமாரும் தொடர்ந்து சென்றார் எனவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி ஸ்வாதி கொலை நடந்த சில நாள்களில் ராம்குமாரின் விடுதி அறையில் ரத்தக்கறையுடன் ஒரு சட்டை கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடக்கப்பட்ட ராம்குமார் சிறையில் மரணம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைெ விதித்துள்ளது.
ராம்குமாரின் தந்தை பரமசிவம் புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய முடிவு செய்தது. மனித உரிமை ஆணைய விசாரணையை ரத்து செய்யக்கோரியும், தடை விதிகக்கோரியும் சிறை கண்காணிப்பாளராக இருந்த ஆர்.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே ராம்குமார் தற்கொலை செய்து இறந்ததாக உடல் கூராய்வு அறிக்கை மற்றும் மாஜிஸ்ட்ரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் என அன்பழகன் தரப்பில் கூறப்பட்டது. முடித்து வைத்த வழக்கை 4 ஆண்டுகளுக்கு பிறகு மாநில மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் அன்பழகன் முறையிட்டார்.
ராம்குமார் தந்தையின் வழக்கறிஞர் தவறான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருகிறார் என்றும் அன்பழகன் தரப்பில் கூறப்பட்து. இந்நிலையில் இந்த வழக்கு ஆணையத்தில் மீண்டும் டிசம்பர் 7ல் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் விசாரணைக்கு தடை விதித்து ஆணையம் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்