Rameswaram-Talaimannar Shipping: ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, தமிழக சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு உள்ளது. 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக புதிய கடல் பாலம் கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது. 50 ஆண்டு நடைபெற்று வந்த கடல் போக்குவரத்து 1964ல் வீசிய கோரப்புயலில் தனுஷ்கோடி நிலைகுலைந்ததால் நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து, இலங்கை உள்நாட்டு போர் காரணமாக சில ஆண்டுகளில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது
மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாடுகளும் பல்வேறு முயற்சிகள்
மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாடுகளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், கடந்த 2023, அக். 14ல் நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவங்க மத்திய அரசு திட்டமிட்டது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முன்னாள் துணைத்தலைவர், தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், ராமேஸ்வரம் தீவின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான அக்னி தீர்த்தக் கடற்கரை, தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம் உள்ளிட்ட இடங்தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய ஜெட்டி பாலம் கட்டுவதற்கு ஐஐடி குழு சார்பில் கடலுக்குள் மணல் ஆய்வு செய்யப்பட்டது.
கடலுக்குள் மூழ்கிய தனுஷ்கோடி
தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இருந்தது. கடந்த 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது. ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து, இலங்கை போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. அதன்பின், கப்பல் போக்குவரத்து துவக்கப்படவில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும். அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல, ரயில் வசதி உள்ளது.
118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை
இதனால், விமானப் பயணச் செலவு பெருமளவு குறையும். எனவே, ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, தமிழக சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட பணிகள் துவங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.
ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசு வாயிலாக பணிகள் நடைபெறுகிறது
இது குறித்து, மாநில சிறு துறைமுகங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது., தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க, ராமேஸ்வரம், தலைமன்னார் துறைமுகங்களை சீரமைக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசு வாயிலாக பணிகள் நடந்து வருகிறது. தலைமன்னார் துறைமுகத்தை அம்மாநில அரசு இன்னும் மேம்படுத்தவில்லை. இதனால், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசு வாயிலாக இத்திட்டத்தை சாகர்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, திட்ட மதிப்பீடு தயாரித்தும், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார்.