அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்ட சூழலில் இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமாரை அடித்து விசாரணை செய்யச் சொன்ன உயர் அதிகாரி யார் என தெரியவரும் என சொல்லப்படுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை போட்ட உத்தரவு என்ன?
 
”சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை  விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ., இயக்குநர் நியமிக்க வேண்டும். அந்த அலுவலர்கள் மாவட்ட கூடுதல் நீதிபதியின் விசாரணை அறிக்கை மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சாட்சிகள், ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். விசாரணை முறையாக நடைபெற வேண்டும். அனைத்து தரப்பிலும் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். தடய அறிவியல்துறை அறிக்கையை 1 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சிபிஐ விசாரணை அலுவலர்களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.
 
டெல்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரிகள்
 
இந்நிலையில் திருப்புவனம் அஜித்குமார் வழக்கை விசாரணை நடத்துவதற்காக டெல்லியிலிருந்து  டிஎஸ்பி மோகித்குமார்  தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து மதுரை வந்தடைந்த நிலையில்  விசாரணையை தொடங்கியுள்ளனர். மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகளும்,  அலுவலர்களும் வருகை தந்துள்ளனர்.
 
சி.பி.ஐ., விசாரணை தொடங்கியது
 
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் அவர்களின் விசாரணை அறிக்கையை பெற்ற பின் தென்மண்டல ஐஜி மற்றும் சிவகங்கை மாவட்ட (பொறுப்பு ) எஸ்.பி உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்திய பின்பாக விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளனர்.
 
முக்கிய தகவல்கள் வெளிவருமா?
 
அஜித்குமார் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்ட சூழலில் இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமாரை அடித்து விசாரணை செய்யச் சொன்ன உயர் அதிகாரி யார் என தெரியவரும் என சொல்லப்படுகிறது.