ராமேஸ்வரம் அருகே மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனைபெற்று கொடுக்க வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “ராமேஸ்வரம் அருகே வடகாடு என்ற ஊரில் கடல்பாசியை சேகரிக்க சென்ற பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, முகத்தை சிதைத்து இவ்வளவு அநியாயம் செய்துள்ளனர். ஏதோ ஒரு ஆலையில் வேலை செய்யக்கூடிய வடநாட்டை சேர்ந்த இளைஞர்கள் என்று அங்கிருக்கும் மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இவர்களா? யார் என்று விசாரணையில்தான் உண்மை தெரியவரும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உச்சபட்சமாக தண்டனை வழங்க வேண்டும்” என்று கொதிப்புடன் கூறினார்.
நடந்தது என்ன..?
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றது. இங்குள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழில் பிரதானமாக செய்து வருவதோடு பெண்கள் கடலுக்குச் சென்று கடல் பாசி சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது மதிப்புடைய பெண் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.
கேலி, கிண்டல்..
இதையடுத்து சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல்பாசி சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் மீனவப் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் கடல்பாசி சேகரிக்க சென்றபோது இறால் பண்ணை அருகே மீனவ பெண்ணை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து உயிரிழந்த மீனவ பெண்ணின் உடலை மறைக்கும் நோக்கத்தோடு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து உடலை எரித்துள்ளனர். அதில் சந்திராவின் உடல் நிர்வாணமாக அரைகுறையாக எரிந்து கிடந்துள்ளது.
இதையடுத்து வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்று மாலை 4 மணிக்கு வீடு திரும்ப வேண்டிய பெண் வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடல்பகுதியில் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர் உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடிக்கொண்டிருந்த போது அவருடன் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரித்த போது கடந்த இரண்டு நாளுக்கு முன்பு இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வட மாநிலத்திலத்தவர்கள் அப்பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து இறால் பண்ணை அமைந்துள்ள பகுதியில் தீவிரமாக கிராம மக்கள் மற்றும் போலீசார் தேடியபோது கடல் பாசி சேகரிக்க கொண்டுசென்ற கண்ணாடி, சாப்பாட்டு பாத்திரம் உள்ளிட்டவற்றை முதலில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடலில் துணி இல்லாமல் அரைகுறையாக எரிந்த நிலையில் பெண் கிடந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
பின்னர் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர் மற்றும் மீனவ கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன் அதில் பணியாற்றிய ஆறு வடமாநிலத்தவர்கள் தான் கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சரமாரியாக அவர்களை தாக்கி அவர்கள் பயன்படுத்தி வந்த இரண்டு இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
பின்னர் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்