பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலந்த வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் என்றால் உடன் நினைவுக்கு வருவது பாம்பன் பாலம் தான்.
பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம் ஆகும். இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து 340 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் பாம்பன் தீவில்தான் அமைந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடல் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். 1876இல் ஆங்கிலேயர்கள் இந்தியா-இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899ஆம் ஆண்டில் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.
தமிழகத்தின் தென் பகுதியையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும் என கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் தான் பாம்பன் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் ராமநாதபுரத்துக்கும் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையே 1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாக இருக்கிறது. இருப்பினும், அவ்வபோது சரியான நேரத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.
தற்போது, பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலந்த மஞ்சள் வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயில், பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்லும் போது பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் அதிர்வுகள் கண்டறிபட்டதால், ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பாம்பன் தூக்கு பாலம் வழியாக தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய ரயில்வே தலைமை பொறியாளர்கள் தொடர்ந்து தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் சீர் செய்யபட்டு வருவதுடன் பாலம் பராமரிப்பு பணிகளையும் ரயில்வேத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தூக்கு பாலம் மீண்டும் துரு பிடிக்க தொடங்கியதையடுத்து இதனை தடுக்கும் வகையில் ரசாயனம் கலந்த மஞ்சள் வர்ணம் அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் பாலம் முழுவதும் மஞ்சள் மயமாக காட்சியளிக்கிறது.