ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இந்த நிலையில் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் அவரது படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு ஒரு நாளைக்கு ஒரு  கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


கடந்த ஜுன் மாதம் 21ம் தேதி  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவற்றில், உதயகுமாருக்கு சொந்தமான படகில் உதயகுமார், அவரது மகன்கள் ரவீந்திரன்(40), உலகநாதன்(35), வைத்தியநாதன்(27), அருள்நாதன்(23), முத்து மகன் குமரேசன்(35),  அகிலா என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் காளிமுத்து(45), எம்.அர்ஜுனன்(50), எஸ்.குமார்(42), என்.குருமூர்த்தி(27), எம்.அருண்(22) மற்றும் தமிழரசனுக்கு சொந்தமான படகில் தமிழரசன், சி.பாஸ்கர்(40), ஓ.முத்துராஜா(25), டி.அரேன்(20), டி.ஜெகநாத்(35), எஸ்.குமார்(43), ஆகியோர் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 405 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.  அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அந்தோணி பிரசாத்துக்கு சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்களை கைது செய்தனர். மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு 22 தமிழக மீனவர்களும் சில தினங்களுக்கு முன்பு  நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Rahul Gandhi Mechanic Video: “பைக் ஓட்ட விடமாட்றாங்க” - மெக்கானிக்குகளிடம் புலம்பிய ராகுல் காந்தி.. வைரல் வீடியோ..!