கடல் ஆமைகளுக்கு நீண்ட துடுப்பு போன்று உறுப்புகள் இருப்பதால் அவற்றால் எளிதாக கடலில் நீந்த முடிகின்றது. உடலின் முன்புறம் அமைந்துள்ள இந்த உறுப்புகள் ஒரு விமானத்தின் இறக்கைகளைப் போல உள்ளன. இந்த உறுப்புகள்தான் அன்றாட வாழ்க்கைக்கான இயங்கு சக்தியை ஆமைகளுக்குத் தருகின்றன. கடலில் ஆமை நீந்துவதைப் பார்ப்பது ஒரு வியப்பூட்டும் அனுபவம். உலகில் அதிக நாட்கள் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்று கடல் ஆமை. இதனுடைய மேலு ஓடு இதய வடிவில் இருக்கிறது. இது மிகவும் உறுதியானது. ஆமையின் மிருதுவான உடல் பகுதியை இது பாதுகாக்கிறது. ஆமையின் கழுத்து மிகச் சிறியது. ஆனால் சுருங்கி விரியக்கூடியது. சராசரியாக ஒரு ஆமை 115 கிலோ எடை இருக்கும். கடலில் வேகமாக நீந்தும் ஆமை, கடற்கரையில் மிக மெதுவாகத்தான் நடை பயிலும். இதற்கும் அந்தத் துடுப்பு போன்ற உறுப்புகள்தான் பயன்படுகின்றன. மணலில் ஊர்வது அதற்குக் களைப்பூட்டுவதாக இருந்தாலும் முட்டை போடுவதற்காகவே கடற்கரைக்கு ஆமை வருகிறது.



கடற்கரையில் முட்டையிட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்லும் ஆமைகள் மீண்டும் 30 ஆண்டுகள் கழித்துகூடத் தான் முட்டையிட்ட இடத்துக்குச் சரியாக வந்து சேரும். திரும்பவும் அதே இடத்தில் முட்டைகளை இடும். கடல்நீர் மட்டத்தை விட உயரமாக உள்ள பகுதியைத்தான் முட்டை இடுவதற்கு இவை தேர்வு செய்கின்றன. கடலில் பெரிய அலை வரும்போது கடற்கரையிலுள்ள முட்டைகளை அடித்துச் சென்று விடுவதைத் தவிர்ப்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு என சொல்லப்படுகிறது.  ஆமை கூடு கட்டுவது என்பது மணலில் குழி தோண்டுவதுதான். அந்தக் குழிதான் அதன் கூடு. அதற்குள் ஒரு சமயத்தில் 80-இல் இருந்து 150 முட்டைகள் வரை இட்டுவிட்டு குழியை மூடிவிட்டுச் சென்றுவிடும். இந்தக் குழிகளை மனிதர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.



ஆமைகளின் இனப்பெருக்கம்:-


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆமைகளின் முட்டையிடும் காலம். பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள் முட்டைகளை இடும். முட்டைகளை இட்டவுடன் அதன் வேலை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு முட்டைகளைப் பாதுகாக்கவோ, குட்டிகளைப் பார்ப்பதற்கோ பெரிய ஆமை வராது! முட்டைகளின் மேல் பகுதி மிருதுவாக, நெகிழும் தன்மையுடையதாக இருக்கும். மணல் சூட்டினால்தான் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. இப்படி முட்டைக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவர 55 நாட்கள் ஆகும். குட்டி ஆமைகளின் பற்கள் மிகவும் கூர்மையானவை. இதைக் கொண்டு முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளிவருகின்றன. வெளிவரும் குட்டிகளின் நீளம் 5 செ.மீ. இருக்கும். வெளியே வந்தவுடன், வந்த வேகத்திலேயே கடலுக்குள் இந்தக் குஞ்சுகள் சென்றுவிடும். கடலுக்குள் சென்றவுடன் லாகவமாக நீந்த ஆரம்பித்துவிடும்.



மீனவ நண்பன் ஆமை:-


பின்னர் நெடும் பயணம்தான். வழியில் சிறிய நண்டுகளையும் நத்தைகளையும் உணவாக உட்கொண்டு வளர ஆரம்பிக்கும். ஏதாவது வெதுவெதுப்பான வளைகுடப் பகுதியைத் தேடிச் சென்றுவிடும். அங்கேதான் அவற்றின் வாழ்க்கையின் அடுத்த பகுதி ஆரம்பிக்கிறது. அங்கு சுமார் 10 ஆண்டுகள் வசிக்கும். அங்கிருக்கும் ஸர்காஸயும் என்ற கடற்பாசிகளை உண்டு வாழும். அதன்பிறகு அதிக ஆழமில்லாத பகுதிக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். அங்கு கிடைக்கும் சிறுசிறு நண்டுகள், நத்தைகள், சிறு இறால்கள் மற்றும் ஜெல்லி மீன்களை உண்டு வளரும். இந்த ஜெல்லி மீன்கள் அதிகம் இருந்தால் கடல் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஜெல்லி மீன்களின் எண்ணிக்கையைக் கடல் ஆமைகள் குறைப்பதால் "மீனவர்களின் நண்பன்' என்ற பெயரும் ஆமைக்கு உண்டு.



12 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு:-


இந்நிலையில்,  தற்போது  சீசன் தொடங்கியுள்ள நிலையில் தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 2 மாதத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஐந்து வகையான ஆமைகள் உள்ளன. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகின்றது. மேலும் ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிடும் சீசன் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். மாவட்டத்திலேயே தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் முட்டையிடுவதற்கு உகந்த பகுதியாக வனத்துறையால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிடும் சீசன் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது.


இதனிடையே தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமைகள் முட்டையிட்டு சென்று உள்ளதா என்பதை கண்காணிக்க பணியில் ஈடுபட்டனர்.  இதில் 11 இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 1,058 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்துள்ளனர். தொடர்ந்து சேகரித்த ஆமை முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைத்தனர்.



இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், தனுஷ் கோடி கடற்கரை பகுதியில் ஒரே நாளில் 11 இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 1,058 முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலும் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டுச்சென்ற 12,227 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆமை முட்டையிட்ட நாளில் இருந்து 55-ல் இருந்து 60 நாட்களுக்குள் அந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்து விடும். குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்த பின்னர் இந்த குஞ்சுகள் கடலில் விடப்படும் என தெரிவித்தனர். தனுஷ்கோடி கடற்கரையில் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் முட்டைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆமை முட்டையிட்ட தேதி, எத்தனை முட்டைகள் என்பது குறித்தும் தெளிவாக எழுத்து பலகை ஒன்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.