ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே சுகாதார பணி பெண் காளியம்மாள் (58), அவரது மகள் மணிமேகலை (34), ஆகியோரது  உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் வீட்டுக்கதவு  உள்புறமாக  பூட்டிய நிலையில், கடந்த 7 ஆம் தேதி காலையில்  கிடந்தது. அவரது உடல்களை மீட்ட போலீசார் காளியம்மாளின் மூத்த மகள் சண்முகபிரியா புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து துரிதமாக விசாரித்து வந்தனர். இது தொடர்பாக நடத்திய  போலீஸ்  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள  காளியம்மாள், மண்டபம் முகாம் உமையாள்புரத்தில் புதிய வீடு ஒன்று கட்டி வந்தார். கட்டட வேலைகளில் புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 4 பேர் செய்து வந்தனர். இந்நிலையில், காளியம்மாள் குடியிருந்த ரயில்வே குடியிருப்பில் சிதைந்த தரை தளத்தை 4 பேரும் கடந்த 3 வாரங்களுக்கு முன் பூசும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மாளிடம் இருந்த நகை, பணத்தை  நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இந்த 4 பேரில் 3 பேர் மட்டும் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு 11:30 மணியளவில் அரிவாள், இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் காளியம்மாள் வீட்டின் பின்புற வாசல் வழியாக சத்தமின்றி  உள்ளே புகுந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலை தாக்கி கொலை செய்துள்ளனர். தடயத்தை மறைக்க தீயிட்டு எரித்து விட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியுள்ளனர். 




போட்டோவுடன் கூடிய இருவரின் இறப்பு செய்தியை  தொலைக்காட்சிகளில் பார்த்த, காளியம்மாள் வீட்டில் வேலை பார்த்த அகதி ஒருவர், தன்னுடன் வேலை பார்த்த மற்ற 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி போலீசார் விசாரித்தனர்.  மண்டபம்  முகாமில் வசித்து வரும் புதுக்கோட்டை அகதிகள் முகாம் சசிகுமார் (35), கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாம்  ராஜ்குமார் (எ) சம்பூர்ணலிங்கம் (30 )ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து  தங்க வளையல் 4, செயின் 2, தோடு 2  ஆகியவற்றை கைப்பற்றினர்.  இதில் தொடர்புடைய நிஷாந்தனை தேடி வருகின்றனர். இந்நிலையில், தாய், மகள் எரித்து கொல்லப்பட்ட இடத்தை தென் மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் எஸ்பி உள்ளிட்டோர் பார்வையிட்டு, காளியம்மாள் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.




இது தொடர்பாக காவல்துறையினரிடம் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காளியம்மாள் தனது 2வது மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். காளியம்மாள் அப்பகுதியில் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காளியம்மாள் மற்றும் அவரது மகள் மணிமேகலை வீட்டில் மர்மமான முறையில் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அவரது மூத்த மகள் சண்முகப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, காளியம்மான் மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் எதிரே சொந்தமாக வீடு கட்டி வந்த நிலையில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சசிக்குமார் என்பவர் அங்கு கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மேலும் காளியம்மாள் வசித்த வீட்டிலும் அவ்வபோது சில வேலைகளை செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து காளியம்மாள் அவரது மகளுடன் தனியாக வசித்து வந்ததால் சசிகுமார் ஒரு மாதங்களாக காளியம்மாள் வீட்டை நோட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.




இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சசிகுமாரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதில், கடந்த 6ஆம் தேதி இரவு சசிகுமார் தனது கூட்டாளிகள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரும்  சேர்ந்து காளியம்மாள் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்து தூங்கிக்கொண்டிருந்த காளியம்மாள் மற்றும் மணிமேகலையை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகை மற்றும் வீட்டில் நகை, பணம் உள்ளிட்டவர்களை கொள்ளை அடித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த துணிகள் கீழே போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் சசிகுமார்,ராஜ்குமார் மற்றும் நிசாந்தன் ஆகிய மூன்று பேர்  மீது வழக்குபதிந்து,சசிகுமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தப்பி ஓடிய நிசாந்தனை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர் என தெரிவித்தனர்.